தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களும், அவற்றின் பொருளாகும்.
மேலும் தட்சிணம் என்றால் பெறுதல் அல்லது பெற்று கொள்ளுதல் என்பதாகும் அதாவது ஞானகடவுளாக அருளும் பரமகுரு தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை தட்சிணமாக வழங்குவதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் ஏற்பட்டுள்ளது.
பஞ்சகுண சிவமூர்த்திகளில் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.
படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமார்கள் எனப்படும் சனகாதி முனிவர்கள் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.
இதனை உணர்ந்த சிவபெருமான் தானும் சக்தியுடன் இருப்பதை கண்டால் பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் (ஆலமரம்) கீழ் அமர்ந்து வரவேற்றார். பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு தட்சிணாமூர்த்தியாக இருந்து சிவபெருமான் பதில் தந்தார். எனினும் ஞானத்தின் கேள்விகள் அதிகரித்தவண்ணமே இருந்தன. பின்பு தட்சிணாமூர்த்தி சின் முத்திரையை அவர்களுக்கு காண்பித்தார். பிரம்ம குமாரர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் உண்டாயிற்று. அவர்கள் ஞானம் பெற்றனர்.
தட்சிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் 'அபஸ்மாரன்' என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மாரன் அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் / ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லை / ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். அவர் தியானத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.
— Selvaraj Venkatesan (@niftytelevision) December 31, 2024பாடல்
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
(திருவிளையாடற் புராணம் - பாடல் - 13)
விளக்கம்
கல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்குமுனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்
நான்மறை: ரிக்கு, எசுர், சாமம், அதர்வணம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.