Friday, June 9, 2023

சக்திவாய்ந்த அகத்தியர் அருளிய திருமகள் துதி

அகத்தியர் அருளிய லட்சுமி துதி

மூவுலகம் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித் தேவர்உல கினும்விளங்கும் புகழ்க்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும் பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சு கின்றான் மூன்று உலகங்களுக்கும் துன்பத்தை விளைவிக்கின்ற வலிமை பொருந்திய அசுரர்களுடைய உயிரை ஒழிக்கின்றதும், பூவையொத்த மென்மையான, அழகிய உடலை கொண்ட அருட் கடவுளான திருமாலின் மார்பில் தோன்றிய தாயே, தேவர் உலகத்திலும் சிறப்பான புகழ்மிக்க கொல்லாபுரம் ஊரில் சேர்ந்து இனிதாக வீற்றிருக்கும் பாவையாகிய திருமகளின் இரண்டு திரு அடிகளையும் வணங்கி, பழைமையான சாத்திரங்களையெல்லாம் ஆராய்ந்து குரு முனிவரான அகத்திய முனிவர் பாடுகின்றார். கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென் பொகுட்டி லுறை கொள்கைபோல மழையுறழுந் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே கரகமலம் முகிழ்த்தெந் நாளுங் கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர அருள்கொழிக்குங் கமலக் கண்ணாய். தேனிற்காக வரும் வண்டினம் பண்களை பாடுவதற்கு இடமாக இருக்கும் தாமரை மலரின் கொட்டையில் உறைகின்ற தத்துவம் போன்ற மழை நீர் நிரம்பிய கருமுகிலினை ஒத்த நிறத்தினையுடைய திருவுடம்பினையுடைய மணிவண்ணனாகிய திருமாலின் உள்ளமாகிய தாமரை மலரில் வாழுகின்ற மான் போன்ற அருட்பார்வை கொண்ட திருமகளே. உலகம் முழுவதும் உனது அருளினால் தீன்றிய அருட்கொடியே. என்னாளும் உனை மறவாது தாமரை மலர் போல் இரு காரமும் குவித்து உன்னை மிகுந்த காதலோடு அதாவது மிகுந்த அன்போடு வணங்குபவர்களின் தீவினை தீர்த்து அருள் பொழியும் தாமரை மலர் போன்ற கண்களை உடையவளே! கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலோன் தனையீன்ற விந்தை தூய அமுதகும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள் அவதரித்தோய் அன்பர் நெஞ்சத் திமிரமகன் றிடவொளிருஞ் செஞ்சுடரே எனவணங்குஞ் செய்வான் மன்னோ. தாமரை மலர் போன்ற கண்ணுடைய திருமகளே. அழகிய மறுவமைந்த மார்பினை உடைய திருமாலின் இல்லத்தரசியே. செழுமை நிறைந்த தாமரை மலரினை ஒத்த கையினை உடையவளே, செந்நிறமான விமலையே, பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கும் வேனிற் காலத்திற்குரியவனான காமனைப் பெற்றவளே, தூய்மையான அமுதகலசத்தை ஏந்திய பூ போன்ற மென்மையான கையினை உடையவளே, பாற்கடலில் பிறந்தவளே, அன்பர்கள் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஒளிரச் செய்யும் செழுமையான பேரொளியே என்று போற்றி வணக்கிறேன். மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன் கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாம் காவல் பூண்டான் படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும் துடைத்தனன்நின் பெருங் கீர்த்தி எம்மனோ ரால் எடுத்துச் சொல்லாற் பாற்றோ. அழகிய இதழ்களையுடைய நல்ல மணமுள்ள தாமரை பூக் கொட்டையில் அரசாயிருக்கும் நற்பவளம் போன்ற சிவந்த அதரங்களை உடைய மயில் போன்றவளே, மற்றும் உன் கடைக்கண் பாரரவை அருள் பெற்றல்லவா நீல மணி நிறத்தினையுடைய திருமால் உலகையெல்லாம் காக்கும் தொழிலை மேற்கொண்டார். நான்கு முகக்கடவுள் படைத்தல் தொழிலை செய்தார். பசுமையான பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமானும் அழித்தற் தொழிலைச் செய்தார். நின் பெருங் கீர்த்தி என்னை போன்றோரால் எப்படி எடுத்துச் சொல்ல முடியும் மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும் கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சி யோடும் வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில் வாகைபுனை வீரர் தாமும் அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள்நோக்கம் அடைந்துளாரே. வளம் பொருந்திய பரந்த பூமி முழுவதையும் பொதுவானவற்றிலிருந்து விலகி தனியே ஆட்சி செய்யும் அரசர்கள் தானும், கல்வியிலும், பெரிய அறிவிலும், மிகுந்த அழகிலும் சிறந்து விளங்குவோரும், வெல்லுகிற படையினால் பகைவர்களை துரத்தி கொடிய போரில் வெற்றி வாகை சூடும் வீரர்கள் தானும், தாமரை மலரின் அகவிதழாம் அல்லி வட்டத்தினுள் உள்ள கொட்டையின் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளாம் தங்களின் திருஅருளைப் பெற்றவர்களே ஆவர். செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிரும் எழில்மேனித் திருவே வேலை அங்கண்உள்ள கிருள்துலக்கும் அலர்கதிர் வெண்மதியாய் அமரர்க் கூட்டும் பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங்கானில் பொருப்பில் மண்ணில் எங்குளைநீ அவணன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்ப தம்மா. செந்தாமரை மலரின் பொன்னிறமான மகரந்தத்தை போல் சிறந்து ஒளிரும் அழகிய எழில் மேனியினளே திருமகளே, கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தின் இருளை விரட்டும் சூரியனாய், வெண்மையான சந்திரனாய், தேவர்களை மகிழ்விக்கும் பொங்கும் நெருப்பாய் நின்று உலகை காக்கும் பூங்கொடி ஆனவளே! நீண்ட காட்டில், மலையில், நிலத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு செல்வ வளம் சிறப்பாக ஓங்கி இருக்கிறதம்மா. பலன்: என்றுதமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும் இருநிலத்தில் இறைஞ்சலோடும் நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய் இத்துதியை நவின்றோர் யாரும் பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவோர் ஈங்கிதனைப் பொறித்த ஏடு மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு தவ்வை அவண் மருவல் செய்யாள். என்று திருமகளை புகழ்ந்து பாடிய தமிழிற்கு இலக்கணம் செய்த குறு முனியாகிய அகத்திய முனிவர் தனது மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கலானார். அங்கு தோன்றிய திருமகளும் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த வல்லவனே நீ என்னை புகழ்ந்து பாடிய பாடலிற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்பாடல்களை முறைப்படி படிப்பவர்கள் பெரிய இன்பத்தை அனுபவிப்பார்கள். என்னை புகழ்ந்த இந்த பாடல்கள் எழுதிய ஏடு யார் வீட்டில் இருக்கிறதோ அவர்கள் வீட்டிற்கு வறுமையைத் தரும் எனது தமக்கையானவள் வரமாட்டாள் என வரமளித்தார்கள்..


 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Agni Suktam

#Agnisuktam pic.twitter.com/XFsnna8UmY — Selvaraj Venkatesan (@niftytelevision) December 10, 2024 The Agni Suktam, a hymn from the Rigved...