Saturday, March 25, 2023

Vinayagar Agaval – விநாயகர் அகவல் பாடல்

விநாயகர் அகவல் – பெயர் காரணம்

‘அகவல்’ என்ற சொல்லுக்கு அழைத்தல் என்று பொருள். மயிலின் குரலும் அகவல் ஓசை கொண்டது என்பர். மேலும், ஓவ்வோர் அடியும் தனித்தனியே அழைக்கும் வகையில் அமைந்திருக்கும் பாடலை ‘அகவற்பா’ அல்லது ஆசிரியப்பா என்று கூறுவர்.

விநாயகர் அகவல் என்னும் இந்நூல், விநாயகப் பெருமானின் அருள்வேண்டி அப்பெருமானை அழைத்துப் போற்றித் துதித்து ஆசிரியப்பாவில் இயற்றப்பட்ட பாடல் ஆதலால், இப்பெயர் பெற்றது.

விநாயகர் அகவல் வரலாறு

சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமான் நாயனாரும் கயிலைக்குச் செல்லும்போது ஒளவையாரையும் அழைத்தனர். அவர் அப்போதுதான் விநாயகர் பூசையைச் செய்யத் தொடங்கியிருந்தபடியால், விரைவாக வழிபாட்டை முடிக்கலாயினார். அதை அறிந்த விநாயகப்பெருமான், “ஒளவையே! அவசரம் ஏதும் வேண்டாம். அவர்களுக்கு முன்னதாக நின்னைக் கயிலையில் சேர்த்துவிடுகிறேன். நீ வழக்கம் போலவே நின் பூசையைச் செய்க” என்றார். ஒளவையாரும் விநாயகரின் ஆணைப்படியே பூசையை இனிது முடித்தார். “சீதக் களப” என்று தொடங்கும் விநாயகர் அகவல் பாடி அப்பெருமானை மனம் கனிந்து துதித்துப் போற்றினார். ஒளவையின் தமிழால் உள்ளம் மகிழ்ந்த விநாயகப்பெருமானும், உலகெங்கும் வியாபித்த பேருருவை எடுத்து நின்று, ஒளவையாரைத் தம் துதிக்கையால் தூக்கிக் கயிலையில் சேர்த்தார்.

தங்கட்குமுன் கயிலாயத்தில் ஒளவையார் வந்திருப்பதைப் பார்த்த சேரமான் நாயனார், ‘அஃது எப்படி?’ என்று ஒளவையாரிடம் கேட்டபோது, இவ்வாறு பாடி விடை அளித்தார்:

மதுர மொழிநல் உமையாள் சிறுவன் மலரடியை
முதிர நினையவல் லார்க்குஅரிதோ முகில்போல் முழங்கி
அதிர வருகின்ற யானையும் தேரும் அதன்பின்சென்ற
குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே.
பொருள்: “உயர்ந்த சேரர்குடியில் பிறந்த மன்னனே! இனிய சொற்களைப் பேசும் உமையம்மையாரின் மகனாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை வணங்குபவர்களுக்கு எந்தச் செயலும் செய்வதற்கு அரியது ஆகாது. ஆதலால் நான் இங்கு வந்திருப்பது அரியதன்று. நிலம் அதிரச் செல்லும் யானையும் தேரும் அதற்குப் பின்னர்ப் புறப்பட்டு வந்த குதிரையும் நாழிகை ஒன்றுக்கு காதவழி நடக்கும். நடக்க இயலாத கிழவியாகிய நானும் நடந்து வந்தது காத வழியே ஆகும்”.

ஒளவையார் கணபதியிடம் கொண்ட பேரன்பையும், அந்த அன்பால் நெகிழ்ந்த விநாயகப் பெருமான் தமது துதிக்கையால் எடுத்து விட ஒளவை கயிலையை அடைந்த நிகழ்ச்சியையும், பகழிக் கூத்தர் அருளிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் நூலும் இவ்வாறு போற்றுவதைக் காணலாம்:

கருணையின் வழிபடு முதியவள் தனை,உயர்
கயிலையின் ஒருமுறை உய்த்த விதத்தினர்

– பகழிக் கூத்தர் 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Understanding Intermittent Fasting: How It Works and Its Benefits

Intermittent fasting alternates between fasting and eating periods, promoting fat burning and offering health benefits such as weight loss, ...