Sunday, March 5, 2023

நடராஜர் பத்து

பாடல்: 1 மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நான்கின் அடிமுடியும் நீ, மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ, பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே, பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே, பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ, புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ, எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்கு உரைப்பேன், ஈசனே சிவகாமி நேசனே! யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே... பாடல் : 2 மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட, மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட, கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட, குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட, ஞான சம்பந்தரோடு இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட, நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட, வினையோட உனை பாட, எனை நாடி இதுவேளை, விருதோடு ஆடி வருவாய் ஈசனே ... பாடல் : 3 கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி, காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமல் இரவு பகலும் உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே! தடமென்ற இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ ஈசனே ... பாடல் 4 வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும் கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல என்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய் ஈசனே ... பாடல் 5: நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ சந்ததமுன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ தந்திமுகன் அறு முகன் இருபிள்ளை இல்லையோ தந்தை நீ மலடுதானோ, விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே, வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை ஈசனே ... பாடல் 6: வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும் வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும் மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும் மூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும் பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோபார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ பாலகனை காக்கொணாதோ எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே ... பாடல் : 7 அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ முன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழுவனோ முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமென்றுஉணர்வனோ தன்னை நொந்தழுவனோ உன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய் ஈசனே ... பாடல் : 8 காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் இல்லையென்றனோ தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய் ஈசனே... பாடல் : 9 தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடர்கள் இருந்தும் என்ன, சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம் ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன். யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே ஈசனே ... பாடல் 10 : இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகு தானோ என் அன்னை மோகமோ இதுவென்ன சாபமோ, இதுவே உன் செய்கைதானோஇருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங் கெடுவனோ,ஓஹோ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் இனியருள் அளிக்க வருவாய் ஈசனே ... பாடல் : 11 சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் இவரை, சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால், பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங்கசக்கி, கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி சிறுமணவை முனுசாமி பாடியவை இசைக்கும் எமை அருள்வது இனியுன் கடன் காண் 

ஈசனே ... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Agni Suktam

#Agnisuktam pic.twitter.com/XFsnna8UmY — Selvaraj Venkatesan (@niftytelevision) December 10, 2024 The Agni Suktam, a hymn from the Rigved...